×

ஸ்கேட்டிங் போட்டியில் அக்கா, தம்பி சாதனை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மீனவ குடும்பத்தை சேர்ந்த பள்ளியில் படிக்கும் அக்கா, தம்பி தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்தனர். இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டியில் இருவரும் பங்கேற்கின்றனர். மாமல்லபுரம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் சுகந்தி (31). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். ஏழ்மையான மீனவ குடும்பத்தை சேர்ந்த சுகந்திக்கு மகள் கமலி (13), மகன் ஹரிஷ் (9) என 2 குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் கமலி 8ம் வகுப்பும், ஹரிஷ் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டின்மீது ஆர்வமாக இருந்து வருகின்றனர். மேலும், இவர்கள் கடலில் சர்பிங் விளையாட்டையும் கற்றுக்கொண்டு, ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என ஆர்வமாக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்த சர்வதேச ஸ்கேட்டிங் போர்ட்டர் ஜேமி தாமஸ், நூதன முறையில் கமலி ஸ்கேட்டிங் விளையாடியதை வீடியோவாக படம்பிடித்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து, நியூசிலாந்து நாட்டை சேர்ந்த குறும்பட இயக்குனர் ஷாஷா ரெயின்போ என்பவர், கமலியின் ஸ்கேட்டிங் திறன் மற்றும் ஏழ்மையான குடும்ப சூழல் குறித்து ஆவண குறும்படமாக வெளியிட்டு, சர்வதேச குறும்பட இயக்குநர் விருது பெற்றார். பின்னர் அப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் கமலி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், கடந்த மாதம் குஜராத்தில் நடைபெற்ற 36வது தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் கமலி பங்கேற்றார். இதில் கமலி 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் சோழிங்கநல்லூர், மேட்டுக்குப்பம் பகுதியில் நடந்த தமிழ்நாடு ஸ்கேட்டிங் போட்டியில் கமலி, அவரது தம்பி ஹரிஷ் ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் வென்றனர். இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் இருவரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து கமலியின் தாய் சுகந்தி கூறுகையில், எனது மகள், மகன் ஆகிய இருவரும் கடந்த 10 வருடங்களாக கடலில் சர்ப்பிங், ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கமலி மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் இருவரும் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். நான் மாமல்லபுரம் கடற்கரையில் மீன் வறுவல் விற்று, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் எனது 2 குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறேன். அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் எனது 2 குழந்தைகளும் பங்கேற்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என சுகந்தி வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Aka ,Tampi , Sister, brother achievement in skating competition
× RELATED காரமடை காந்தி நகரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை